வியாழன், 5 நவம்பர், 2009

24 ஒன்றே ஒன்றுதான் பலவானது......
தாளம் : ஆதி ராகம் : தேஷ்


ஒன்றே ஒன்றுதான் பலவானது; அந்த
ஒன்றேதான் உன்னுள்ளே உயிரறிவானது
... ஒன்ற

சென்றதை நினையாதே; வருவதை எண்ணாதே;
இன்றைய பொழுதை நீ இனிதாக்க மறவாதே
... ஒன்றே

கடவுளை மறந்து நீ கடமையில் மூழ்காதே
கடமையைத் துறந்தும் நீ கடவுளைத் தேடாதே
இடமும் வலமுமின்றி நடுநிலையில் நின்று
சுடச்சுட வாழ்வதனை சுவைத்திடு நன்று
... ஒன்றே

ராகம் : சஹான

சிதைக்கு போகும் உடலை சதமென நினையாதே
கதைகள் பல பேசி காலத்தை கடத்தாதே
விதைத்ததே விளையுமென்ற விதியை நீ மறவாதே
எதையுமே யாரையுமே இகழ்ந்து நீ பேசாதே
... ஒன்றே

ராகம் : சாரங்கா

கற்பித உலகமிதை கனவாய் கருதிடுவாய்
அற்ப போகங்களை அளவாய் அனுபவிப்பாய்
பற்பல நூல்களை நீ படித்தாலும் குழம்பாமல்
நற்பணிகளில் மூழ்கி நலம் பல செய்திடுவாய்
... ஒன்றே

ராகம் : ஹூசேனி

வீடும் நாடும் மாயை; விதியும் மதியும் மாயை;
மாடு மனை மாயை; மக்கள் சுற்றமும் மாயை;
பாடும் நானும் மாயை; கேட்கும் நீயும் மாயை;
காடு அழைக்கும் போது வரும் காலனும் கூட மாயை
... ஒன்றே

ராகம் : வராளி

உடலும் நீயில்லை; உள்ளமும் நீயில்லை;
உடமைகளும் நீயில்லை; உயிரறிவே நீயென்று
திடமாய் நீ உன்னுள் தெளிவாய் உணர்ந்த கணமே
அடக்கத்தின் மறுவுருவாய் அமைதியாவாய் திண்ணமே
... ஒன்றே

ராகம் : மத்யமாவதி

வெட்டவெளியொன்றே அனைத்து மாயிற்றென்றே
திட்டவட்டமாய் நாம் தெளிந்தபின் இன்றே
கெட்ட சாதி, சமய, சடங்குகளை மறப்போம்
வெட்ட வெளி தனிலே நம்மை நாம் இழப்போம்
நம்மை நாம் இழப்போம், நம்மை நாம் இழப்போம்!
... ஒன்றே


இந்தப் பாடலை உங்கள் கணினிக்கு தரவிறக்க (டவுன் லோடு செய்ய)இங்கே சொடுக்குங்கள்