அடடே மனோகர்

வியாழன், 5 நவம்பர், 2009

48 பாடு பாப்பா, பாடி ஆடு பாப்பா


தாளம் : ஆதி ராகம் : புன்னாகவராளி

பாடு பாப்பா, பாடி ஆடு பாப்பா; நாம்
வீடு சேர வழி ஒன்றென்றே பாடு பாப்பா
... பாடு

காடு மேடெல்லாம் களைத்துத் திரிய வேண்டாம்
மாடு மக்கள் எதையும் வீணாய் பிரிய வேண்டாம்
பாடு பட்டு பணத்தை பதுக்கவும் வேண்டாம், பின்
கூடு விட்டு போகும் போது கூவியழவும் வேண்டாம்
... பாடு

இல்லையென்போருக்கு நாம் இருப்பதை கொடுப்போம்
தொல்லையில் உழல்வோரின் துயர்தனை துடைப்போம்
எல்லையில்லா பிரபஞ்ச வெளிதனை நினைப்போம்
சொல்லாமலே மனம் விரிவதை ரசிப்போம்
... பாடு

எந்த நம்பிக்கையிலும் நம்மை நாம் இழக்காமல்
வந்த வேலையை செய்வோம் மனம் சற்றும் சலிக்காமல்
சொந்த லட்சியம் ஏதும் இல்லவே இல்லாமல்
இந்த நிமிடம் மட்டும் முழுதுமாய் வாழ்ந்திடுவோம்.
... பாடு

இந்தப் பாடலை உங்கள் கணினிக்கு தரவிறக்க (டவுன் லோடு செய்ய)இங்கே சொடுக்குங்கள்