|
தாளம் : ரூபகம் ராகம் : ஹரிகாம்போதி
ஞானம் வாய்ப்பது அரிதல்ல- பர
ஞானம் வாய்ப்பது அரிதல்ல
இன்றைக்கே, இப்பொழுதே, இக்கணமே வாய்த்திடும்
... ஞானம்
மோன நிலையில் ஆனந்தமயமாய் மிளிரும்
பேராற்றல் மனது வைத்தால் போதும்
... ஞானம்
அறிய வேண்டியதுள்ளிருக்க வெறும்
அறிவை பெருக்கல் ஞானமல்ல
வறியவர்க்கு உதவி வருத்தம் போக்காது
வானவர்க்கு செய்தல் ஞானமல்ல
அரிய பொருளென்று மயங்கி உலகில்
எதன் பின் ஓடுவதும் ஞானமல்ல
உரிய நேரத்தில் செய்ய வேண்டியதை
உதறித் தள்ளுவதும் ஞானமல்ல
... ஞானம்
நிலையில்லா வாழ்விதென்று புரிந்து நம் மனம்
நிலைக்கு வந்து விட்டால் அது ஞானம்
கலைந்து போகும் கனவுகள், கற்பனைகள்
கணிசமாய் குறைந்தால் அது ஞானம்
மலைகள், அருவிகள் பார்த்து நம் மனம்
மலைத்து நின்றாலும் அது ஞானம்
அலையும் மனதையும் அதனருளாலே
அனுபவித்தாலும் அது ஞானம்
... ஞானம்
யாருக்கும், எப்பொழுதும், எதுவும் நடக்குமென்
றோசனையிருந்தால் அது ஞானம்
தேருக்கு அச்சாணி போலே யாருக்கும்
தென்படாதிருந்தால் அது ஞானம்
ஊருக்கு உபதேசிப்பதை தானும்
உண்மையாய் பழகினால் அது ஞானம்
பேருக்கு ஆசைப்படாது பிறர்க்கு
பேருதவி புரிந்தால் அது ஞானம்
... ஞானம்
அட்டமாசித்திகளும், முக்காலம் உணர்வதும்,
அணிகலன் துறப்பதும் ஞானமல்ல
இட்டமாக நாம் விட்ட முடியை
மழிப்பதும் வளர்ப்பதும் ஞானமல்ல
திட்டமெதுவும் தீட்டாமல் துணிந்து
வருவதை ஏற்பதே ஞானம்
குட்ட குட்ட பணிவாய் குனிந்து
வெட்ட வெளிதனில் கலப்பதே ஞானம்!
... ஞானம்
இந்தப் பாடலை உங்கள் கணினிக்கு தரவிறக்க (டவுன் லோடு செய்ய)இங்கே சொடுக்குங்கள்
0 comments:
கருத்துரையிடுக