தினந்தோறும் மற்றும் ஒவ்வொரு கணமும் என்னைச் சுற்றி நடக்கும் நிகழ்ச்சிகளும், அதனால் எனக்குள் ஏற்படும் எண்ண அதிர்வுகளும், என்னுடைய வாழ்க்கையில் எனக்கு ஏற்பட்ட அனுபவங்களும், பின் வரும் கட்டுரையை எழுதும்படி என்னைத் தூண்டின. இதை பொறுமையோடு படித்து அனுபவிக்குமாறும், பயன் பெறுமாறும், வெகு தாழ்மையுடன் உங்களை கேட்டுக் கொள்கிறேன்.
இதை படித்து முடித்தபின், உங்களுக்கு ஏதேனும் கேள்விகள், சந்தேகங்கள் இருந்தால் தயவு செய்து என்னைத் தொடர்பு கொள்ளவும் (அவை மிகச்சூடான உங்கள் விமரிசனங்களாகவும் இருக்கலாம்; தவறில்லை); உடனுக்குடன் உங்கள் அனைத்து கேள்விகளும், சந்தேகங்களும் ஆராயப்பட்டு விரைவில் பதில்கள், விளக்கங்கள் அனுப்பி வைக்கப்படும். நன்றி. இப்போது நீங்கள் படிக்க ஆரம்பிக்கலாம்.
=============================================================
நமக்கு இவ்வுலகம் புதியதாய் தோன்றலாம்; ஏனென்றால் நாம் வெகு சமீபத்தில்தான் பிறந்தோம். ஆனால் இவ்வுலகம் பல கோடிக்கணக்கான ஆண்டுகளாய் இருந்து கொண்டிருக்கிறது. இங்கே நாம் தான் முதலில் பிறந்தோம் என்று சொல்ல முடியாது; ஏனென்றால் ஏற்கனவே கோடானுகோடி நபர்கள் பிறந்து, வாழ்ந்து, இறந்தும் போய்விட்டார்கள். அம்மாதிரி, இன்று நாமுள்ளோம்; நாளை நாம் இருக்க மாட்டோம்.நாம் விருப்பப்பட்டு இங்கு வரவில்லை; அம்மாதிரியே போவதும் நம் விருப்பத்திற்கு இணங்க இருக்காது. ஆனால் நாம் இங்கு வந்தது எவ்வளவு சத்தியமோ அம்மாதிரியே இங்கிருந்து போகப்போவதும் சத்தியமே.
ஆரம்பம் உள்ள எதற்கும் முடிவும் உண்டு. அதனால், நாமும் ஒரு நாள் காணாமற் போய்விடுவோம்; ஆனால் இப்பூமி எப்போதும் போல் நாமில்லாமல் சுழன்று கொண்டேயிருக்கும், நாம் பிறப்பதற்கு முன் சுழன்றுகொண்டிருந்த மாதிரி. நம் பிறப்பினாலோ. இறப்பினாலோ இப்பூமி எள்ளளவும் மாறப் போவதில்லை. இந்த பூமிக்கே கூட ஒரு ஆரம்பம் உண்டு - அது ஒரு சில கோடி வருடங்களுக்கு முன் உண்டானது; அதனால் பூமிக்கும் முடிவு உண்டு - சில கோடி கோடி வருடங்களுக்குப் பிறகு. அதனால், எதுவுமே, இந்த பூமியும் கூட, நிரந்தரமில்லை; அதனால் மிஞ்சி மிஞ்சி 80 அல்லது 90 வருடங்களே வாழப்போகும் நம்மைப்பற்றி பேசவே வேண்டாம்.
இங்கு வரும் போது வந்தது போலவே, போகும் போதும் அம்மணமாக போகப்போகிறோம். நாம் நம்மோடு கூட நாம் மிகவும் நேசிக்கும் நம் உடலையும் எடுத்துச்செல்ல முடியாது - பின் மிகவும் கஷ்டப்பட்டு சம்பாதித்த பணம், வீடு, மற்ற அசையும்/அசையா சொத்துக்களும், அன்பு மனைவியும், பிள்ளைகளும்/பெண்களும், புகழ், பட்டம்/படிப்பு, அந்தஸ்து, கௌரவம், பதவி, சாதனைகள் பற்றியெல்லாம் கேட்கவே வேண்டாம்.
எவ்விதத்திலும் நாம் யாருமே தனிப்பிறவியோ, முக்கியமோ அல்ல. ஒரு வினாடி கூட நாம் 'கோடியில் ஒருவர்' என்று எண்ணிவிடவேண்டாம்; மாறாக, "கோடியில் நாமும் ஒருவர்" என்று நினைப்போம். எல்லா துறைகளிலும் நிறைய நபர்கள் நிறைய சாதித்துவிட்டார்கள். அதனால், ஏதாவது ஒரு துறையில் நாம் ஏதாவது சாதித்தால், அது இந்த பூமி இது வரை கண்டுள்ள ஆயிரமாயிரம் சாதனைகளுள் ஒன்றுதான். அதனால், நாம் ஏதும் சாதிக்கவே முயற்சிக்க வேண்டாம் என்பதில்லை; அதே சமயம் நாம் சிறிதும் மறந்துவிட வேண்டாம் அந்த சாதனையால் நாம் ஏதோ மிக முக்கியமானவர் என்றோ தனிப்பிறவி என்றோ ஆகிவிடமாட்டோம் என்று. நமக்கு மிகவும் பிடித்த துறையில் நாம் ஏதும் சாதிக்க முயலுவோம், ஏனென்றால் அந்த முயலுதல் நமக்கு பிடிக்கும்; அவ்வளவே; அந்த சாதனை நம்மை கர்வம் கொள்ளும்படி செய்யாமல் பார்த்துக்கொள்ள வேண்டும்.
முன்னொரு சமயம் நாம் நம் தந்தையிடம் சிறிது காலமிருந்தோம்; பின் ஒரு குறிப்பிட்ட நாளில் நம் தாயாரின் கர்பத்துள் புகுந்து அங்கு ஒரு சதைப்பிண்டமாய் உருவெடுத்தோம்; பிறகு வளர்ந்தன காதுகள், கண்கள், மூக்கு, வாய், கைகால்கள், மூளை, நகங்கள், முடி, முதலியன; 9-1/2 அல்லது 9-3/4 மாதங்களுக்குப்பிறகு, ஒரு சிறிய சிசுவாய், இவ்வுலகத்திற்குள் தள்ளப்பட்டோம்; பின், நாளொரு மேனியும் பொழுதொரு வண்ணமுமாய் வளர்ந்து, முழதும் வளர்ந்த மூளையுடன், இப்போதுள்ள நிலையை அடைந்தோம். இப்போது நமக்குள்ள உடற்கட்டும், ஆரோக்கியமும், மனோபலமும், வளர்ச்சியும், திறமைகளும், அங்க அடையாளங்களும், குணங்களும், மற்றும் கோப-தாபங்களும், நம் பெற்றோர்கள் மற்றும் நம் முன்னோர்கள் மூலம் நமக்கு கிடைக்கப்பெற்றவை. இதில் எதுவும் நம் திறமையினாலோ, முயற்சியினாலோ நடந்தவை அல்ல.
நாம் உயிர் வாழ இரண்டு விஷயங்கள் மிகவும் முக்கியம் - ஒன்று, சுவாசம்; மற்றொன்று உணவு. ஆனால், சுவாசம் தன் பாட்டுக்கு வந்து போய்க் கொண்டிருக்கிறது, நாம் அயர்ந்து தூங்கும் போதும், வேறு வேலையில் ஈடுபட்டிருக்கும்போதும், எப்போது இவ்வுடலில் உயிர் நுழைந்ததோ அன்றிலிருந்து. மறுபடியும், சுவாசிப்பதிலும் நம் முயற்சியோ, திறமையோ ஏதுமில்லை.
பசி எடுக்கும் போது பிடித்ததை சாப்பிடுகிறோம். ஆனால், நம் வேலை சாப்பாட்டை மென்று முழுங்குவதோடு முடிந்து விடுகிறது. (அது கூட உடம்பில் சக்தியிருக்கும் வரைதான்; இல்லாவிட்டால் "ட்யூப்" (குழாய்) வழியாகத்தான் உணவு உட்செல்லும்.) பிறகு, நம் உடம்பில் உள்ள சின்ன தொழிற்சாலை பலவித வேலைகள் செய்து, சாப்பாட்டை ஜீரணம் செய்து, அதை ஏழு வித தாதுக்களாய் மாற்றி, நம் உடலுக்கு தேவையானதை, தேவையான அளவு, அந்தந்த பாகங்களுக்கு அனுப்பி, இரத்தம், மஜ்ஜை, சதை, எலும்பு, தசை ஆகியவை ஆரோக்கியமாயிருக்க வைட்டமின்கள், தாதுக்கள், கொழுப்பு ஆகியவற்றை உற்பத்தி செய்து மற்றும் சுக்கிலம்/சுரோணிதம் ஆகியவற்றையும் உண்டாக்கி இருப்பில் வைத்து, மற்றும் வேண்டாதவற்றை மல-மூத்திரமாகவும், அவ்வப்போது தானியங்கி தசைகளின் மூலம், வெளியே தள்ளுகிறது. மறுபடியும். இவையெல்லாம் நடப்பதும் நம் முயற்சியினால் அல்ல
நம்மிடமிருக்கும் பலவித திறமைகள் மற்றும் அறிவு, நாம் பலவற்றை பார்த்து, கேட்டு, படித்து, கற்று மற்றும் அனுபவம் மூலம், வந்து சேர்ந்தவைதான். கேவலம் இவற்றை நாம் பெற நமக்குத் தேவை, நம் உடலில் உயிர் புகும் போதே புகுந்த, அடிப்படை அறிவு (Basic Intelligence). இந்த அடிப்படை அறிவு என்பது இல்லாவிட்டால் நாம் வெறும் மூளை வளர்ச்சி குன்றியவர்களாய், வெறும் தாவரங்களாய் இருந்திருப்போம். இந்த அடிப்படை புத்தியும் நம் முயற்சியினால் நம்மை வந்து அடையவில்லை.
அதனால், சுருக்கமாய் சொல்ல வேண்டுமென்றால், உயிர் எங்கிருந்தோ வந்து நம் உடலில் தங்கியுள்ளது; நம் உடல் நம் பெற்றோர் இணைந்ததில் உருவானது; நம் உடற்கட்டு, ஜாடை, உணர்ச்சிகள், திறமைகள், மனோபலம், ஆகியவை நம் முன்னோர்கள் மற்றும் நம் பெற்றோரிடமிருந்து வந்தவை; நம்மிடமுள்ள பலவித அறிவுகள் வெளியிலிருந்து பெறப்பட்டவை; அதுவும் நம் உடலில் உயிர் புகுந்த அன்றே புகுந்த அடிப்ப்டை அறிவின் மூலம்; எல்லாவற்றுக்கும் மேலாக, இவ்வுடலில் உயிர் தங்கியிருக்க மிக அவசியமான உணவை ஜீரணிப்பதும், சுவாசம் போய் வருவதும் சத்தியமாக, நிச்சயமாக, நம் முயற்சியினால் அல்லவே அல்ல.
சுருக்கமாய், உண்மையாய், நாமெல்லாம் ஒன்றுமில்லை; நாமெல்லாம் யாருமில்லை; ஆனால், துரதிர்ஷ்டவசமாக, தவறுதலாக, நாம் அனைவரும் நாமெல்லாம் ஏதோ ஒருவர், யாரோ ஒருவர் என்றெல்லாம் நினைத்துக்கொண்டிருக்கிறோம். கையில் ஒன்றுமேயில்லாத பிச்சைக்காரன் முதல் கோடீஸ்வரன் வரை, அடி முட்டாள் முதல் மிக மிக புத்திசாலி வரை "நான் எல்லாம் தெரிந்த ஒருவன்; நான் அசாதரணமானவன்" என்றெல்லாம் நினைத்துக் கொள்கிறார்கள்.
ஏன் அப்படி? 'சூப்பர்கான்ஷியஸ்னஸ்' என்று சொல்லப்படுகின்ற - அனைத்து முணர்ந்த - பேராற்றல்+பேரறிவு - ப்ரம்மம் - அனைத்திற்கும் மேலான - கண்களுக்கும் நம் அறிவிற்கும் எட்டாத - அனைத்தையும் படைத்த - நாம் பார்க்கும்,கேட்கும், முகரும், உணரும், அனுபவிக்கும் அனைத்தும் எதிலிருந்து உண்டானதோ - அந்த ஒன்றை ஒரு பெரிய மகா சமுத்திரத்திற்கு ஒப்பிடலாமென்றால், 'கான்ஷியஸ்னஸ்' ( உயிர்+அறிவு) - என்று சொல்லப் படுகிற நம்மெல்லோரையும் அந்த மகாசமுத்திரத்தின் சிறு சிறு துளிகளுக்கு ஒப்பிடலாம். அந்த பேராற்றலின் ஒரு சிறு துளி நம்மெல்லோரிடமும் - உயிருள்ள, உயிரில்லாத எல்லாவற்றிலும் - ஒரு சின்னஞ்சிறு அணு முதல் ஒரு மிகப்பெரிய கிரகம் வரை, ஒரு சிறு எறும்பு முதல் ஆரறிவு உள்ள மனிதன் வரை - நடுநாயகமாக வீற்றிறுப்பதால், தன்-முனைப்பு (ego) முன்னிலைப்படுத்திக்கொண்டு 'நான் அசாதரணமானவன்’ என்றும் ‘அனைத்தும் அறிந்தவன்' என்றும் தவறுதலாய் நம்மை நம்ப வைத்துக் கொண்டிருக்கிறது.
இதற்கும் மேலாக நம்மில் சிலர் ' நாம்தான் எல்லாம்' என்று மிக உறுதியாக நம்புகின்றனர்; மேலும் நமக்கு, வேறெந்த உயிர்களுக்குமில்லாத. ஆறாவது அறிவு என்ற ஒன்று உள்ளதால் நாம் எதையும் செய்ய முடியும் என்றும், எதையும் நிகழாமல் தடுக்க முடியுமென்றும் அதீதமாக நம்புகின்றனர். ஆம், வேறெந்த ஜீவராசிகளுக்குமில்லாத ஆறாவது அறிவுடன் நாம் ஆசீர்வதிக்கப்பட்டிருப்பதால் நாமனைவரும் எல்லா ஜீவராசிகளையும் விட மிகச்சிறந்தவர்கள்தாம்; சந்தேகமேயில்லை. ஒரு பூனையோ, நாயோ, புலியோ, நகைச்சுவைக்கு சிரிக்காது; தொடர்ச்சியாக சிந்திக்காது; அவற்றால் எழுத படிக்க முடியாது; இசைக்கு இசைந்து ஆடவோ பாடவோ முடியாது; அவற்றிற்கு தாம் பூனை, நாய், புலி என்றெல்லாமும் தெரியாது; அனைத்திற்கும் மேலாக, ஒரு நொடி கூட அவைகளால் தம் பிறப்பு, வாழ்வு, இறப்பு பற்றியெல்லாம் சிந்திக்க முடியாது. அவை வெறுமே பிறக்கின்றன, வாழ இல்லை, இருக்க சாப்பிடுகின்றன, உள்ளுணர்வால் உந்தப்பட்டு இனவிருத்தி செய்கின்றன; ஒரு நாள் இறக்கின்றன.
நாம் ஆறாவது அறிவுடன் பிறந்திருப்பதால், மேற்சொன்னபபடியெல்லாம் முறையுடன் சிந்தித்து, நியாயமான முறையில் "நான் எவருமில்லை; நான் வெகு சாதாரணமானவன்; முக்கியமில்லாதவன்; என்னை சுற்றி நடப்பவற்றை வெறுமே என்னால் வேடிக்கை மட்டுமே பார்க்க முடியும்; அந்த 'முன்பின் தெரியாதது' முடுக்கிவிட்டபடி நான் செயலாற்றுகிறேன்; எல்லா நிகழ்வுகளிலும் நான் வெறுமே, கையாலாகாதவனாய், சாட்சியாயிருந்து வேடிக்கை பார்க்க மட்டுமே முடியும்; நம் புத்திசாலித்தனத்தினாலேயோ அல்லது முட்டாள்தனத்தினாலேயோ எதுவும் நடந்து முடிவதில்லை; ஆதலால் எந்த வெற்றிக்கும், தோல்விக்கும் நாம் பெருமை அல்லது சிறுமை பட்டுக்கொள்ளத் தேவையில்லை; (காற்று நமக்கு சாதகமாக இருந்தால் வெற்றியும் பெருமையும் நம்மை வந்தடையும்; தொட்டதெல்லாம் பொன்னாய்த் துலங்கும்; காற்று எதிர் திசையில் வீசினால், நாம் எதைச்செய்தாலும் தவறாய் முடியும்; எண்ணங்களும் தவறானவையாயிருக்கும்; அதனால் நமக்கு சிறுமையே வந்து சேரும்); நம்மால் எக்காலத்திலும் வெற்றி தோல்விகளுக்கான சரியான காரணங்களை புரிந்துகொள்ள முடியாது; ஆனால் அவற்றை "அமைதியாக. பணிவுடன் அப்படியே, முணுமுணுப்பில்லாமல், ஏற்றுக்கொள்ள வேண்டும்" என்ற நல்ல பக்குவத்திற்கு வரலாம். அங்கேதான், ஆறாவது அறிவுடன் பிறந்த நாம், மற்ற ஜீவராசிகளைவிட மிக உயர்ந்த நிலையில் நிற்கிறோம்.
இரண்டு காரணங்களுக்காக நாம் எல்லாவற்றிற்கும், எல்லா நிகழ்வுகளுக்கும் பின்னால் உள்ள காரணங்களை கண்டுபிடிக்க முயலுவதை தவிர்க்க வேண்டும் - ஒன்று, நம் வாழ் நாள் வெகு வெகு சொற்பம்; அதனால் அதை இதற்காக செல விடுவது முட்டாள்தனம்; இரண்டு, நமக்கு விடைகளும், விளக்கங்களும், ஒன்றல்ல இரண்டல்ல, பலப்பல விஷயங்களுக்கு தேவை. உதாரணமாய், பல கோடி வண்ணத்து பூச்சிகள் ஒவ்வொன்றும் ஒவ்வொறு வண்ணத்திலும், பல்வேறு வடிவமைப்புகளிலும் இருக்கின்றன. நாம் நம் வாழ் நாள் முழுவதையும் செலவழித்தாலும் நம்மால் அந்த பல்வேறு வண்ணங்களுக்கும், வடிவமைப்புகளுக்குமான காரணங்களை புரிந்துகொள்ள முடியாது. அம்மாதிரியே, இப்பூவுலகில் மட்டுமல்ல இந்த பிரபஞ்சத்திலும் கூட நாம் அறியாதவை, அறிந்து கொள்ள வேண்டியவை எண்ணிலடங்கா. அதனால், எதற்காக நம் நேரத்தை தேவையில்லாமல் அவற்றிற்கான காரணங்களை கண்டுபிடிப்பதில் செலவிட வேண்டும்? அதற்கு பதிலாக, நாம் எல்லாவற்றையும் எல்லா கோணத்திலும் ரசிக்க வேண்டும். ஒரு ரோஜாவை அப்படியே நாம் ஏற்றுக்கொள்வோம் அதன் முட்களோடு; அதை விட்டுவிட்டு அது ஏன் முட்களோடு உள்ளது அல்லது அது ஏன் மல்லிகை மாதிரி மணக்கவில்லை என்றெல்லாம் சிந்தித்து நம்மை நாமே குழப்பிக் கொள்ள வேண்டாம்.
இயற்கையை அப்படி அப்படியே நாம் அனுபவிக்க கற்றுக்கொள்ள வேண்டும்; ஏனென்றால் இயற்கை எல்லாவற்றையும் மிக நேர்த்தியாக, மிக ரம்யமாக, மிகச்சரியாக, மிகத்துல்லியமாக, சிறிதும் தவறில்லாமல் செய்துவருகின்றது; ஒரு பெண் குழந்தைக்கு, அதற்கு 20/22 வயது நிறையும் போது அதற்கு ஒரு குழந்தை பிறந்து அதற்கு இவள் பால் கொடுக்க வேண்டுமென்ற முன்யோசனையுடன், கர்பப்பை, மார்பகங்கள் முதலியவற்றை பொருத்துவதிலிருந்து! நினைத்துப் பார்க்கவே ஆச்சர்யமாயிருக்கிறதல்லவா?
நான் பார்க்கும் அனைத்திலும் 'என்னிடமுள்ள ஒன்றே நடுநாயகமாக இருக்கிறது' என்ற உண்மை சரியாக உணரப்பட்டுவிட்டால் (நாம் அங்கிங்கு படித்ததனாலோ, கேட்டதனாலோ இல்லாமல், பொறுமையாக, நிதானமாக, மும்முரமாக, ஆழ்ந்து, சுயமாக சிந்தித்தப்பின், சந்தேகத்திற்கிடமின்றி உணரப்பட்டுவிட்டால்) உண்மையான மனமாற்றம் நம்முள் நடந்து முடிந்துவிட்டது என்றாகும்; எந்த வகையிலென்றால், அதி அதிர்ஷ்டசாலிகளான நமக்கு இந்த உலகமும், இதிலுள்ளவைகளும், இதிலுள்ளவர்களும், இதுவரையில் இல்லாத மாதிரி திடீரென்று மாறுபட்டு தோற்றமளிப்பர். அனைவரும் சமமே என்றும், யாரும் யாரையும் விட உயர்ந்தவர்களோ, தாழ்ந்தவர்களோ அல்ல என்றும், அனைத்தும், அனைவரும் ஏதோ ஒரு காரணத்துடன் இங்கு வந்துள்ளனர் (படைக்கப் பட்டிருக்கின்றனர்) என்றும் உள்ளபடியே உணர்வோம்.
ஏனென்றால் நாம் எங்கிருந்து, எதற்காக, ஏன் இங்கு வந்துள்ளோம், இறந்த பின் எங்கு செல்வோம், நம்மைச்சுற்றி நடப்பதனைதிற்குமான உண்மையான காரணங்கள் என்னென்ன என்பதையெல்லாம் இதுவரை யாரும் சரியாக கணித்து உள்ளபடியே உரைக்கவில்லை. அப்படியே யாரும் சொல்லியிருந்தாலும், அவையெல்லாம் அவரவர் சொந்த முடிவுகள், நம்பிக்கைகள், சூதாட்ட கணிப்புகள்; அவ்வளவே! ஆதலால், அவை நமக்கு இரண்டாம்தர மற்றும் 'அப்படி இருக்குமா இருக்காதா' என்ற சந்தேகத்துடன் கூடிய கால் அல்லது அரை-உண்மைகள்தான். அவற்றை நாம் மறுக்கவோ அல்லது ஏற்றுக்கொள்ளவோ தேவையில்லை; அவையனைத்தும் அப்படி அப்படியேயிருக்கட்டும்.
மற்றவர்களின் முடிவுகளாலும், போதனைகளாலும் நாம் கவரப்படவேண்டாம். நாமே நேரிடையாக உண்மையை உணர வேண்டும் - நாம் இங்கு வந்ததிற்கான காரணம் ஏதாவது இருக்குமென்றால் அது அந்த உண்மையை உணர்தலே ஆகும்; மேலும் மேலும் பணம் சம்பாதிப்பதற்கோ, சொத்துக்களை இன்னும் பெருக்கிக் கொள்ளவோ, மேலும் மேலும் தேவையில் லாதவற்றையெல்லாம் நம் மூளையில் சேமித்து வைத்துக்கொள்ளவோ, பெயரும் புகழும் சம்பாதிக்கவோ அல்லது எண்ணற்ற நம் நகல்களை பெற்றெடுக்கவோ நாம் இங்கு நிச்சயமாக வரவில்லை.
அந்த மேலான உண்மையை உள்ளபடியே உணர நாம் முதலில் நம்மை காலி செய்து கொள்ள வேண்டும்; அங்குமிங்கும் நாம் படித்து, கேட்டுத் தெரிந்து கொண்ட எல்லா முடிவுகளிலிருந்தும் நாம் விடுபட வேண்டும்; நாம் படித்த அந்த புத்தகங்கள், அனைவரும் மிகப்புனிதமாக கருதும் ஸ்ரீமத் பகவத்கீதையாகவோ, பைபிளாகவோ, குரானாகவோ, தம்மபதமாகவோ, உபநிஷத்துக்களாகவோ அல்லது வேறேதேனுமாகவோ இருக்கலாம்; அல்லது, ஆதி சங்கரர், இராமாநுஜர், புத்தர், முகம்மது நபிகள், ஏசு கிறிஸ்து, போன்ற பெரியோர்கள் என்று நம்பப்படுபவர்கள் சொன்ன வார்த்தைகளாகவும் இருக்கலாம்; ஏனென்றால் அவையெல்லாம் அவர்களின் அனுபவங்கள்; அவ்வளவே. அவையனைத்தும் முற்றிலும் சரியாகவேயிருந்தாலும், மறுபடியும், அவையெல்லாம் அவர்களின் அனுபவங்கள்தாம். எத்தனை முறை அவற்றைத் திரும்பத் திரும்பப் படித்தாலும் நமக்குள் சத்தியமாய் ஏதும் நிகழ்ந்து விடப் போவதில்லை. 'கட்டிக் கொடுத்த சோறும் சொல்லிக் கொடுத்த சொல்லும் வெகு நாள் உடன் வாரா'. நமக்கு ஏற்படும் அனுபவங்களே நமக்கு குரு; அவையே கடைசி வரை நிலைத்து நிற்கும்; மேலும் அவையே நம்முள் வேண்டிய மாற்றத்தை ஏற்படுத்தும். 'ஏட்டு சுரைக்காய் கூட்டுக்கு உதவாது'.
நாம் நம்மை சுற்றிக் கொண்டிருக்கும் எல்லா வித தளைகளிலிருந்தும் விடுபட்டால்தான் நம்மால் புதிதாய், சுயமாய், சிந்திக்க முடியும். காலியாக உள்ள கோப்பைதான் நிரம்பும்; ஏற்கனவே நிரம்பியுள்ள கோப்பை எதையும் ஏற்றுக்கொள்ளாது. அதனால், முதலில், நாம் ஏற்கனவே படித்த, கேட்டவற்றிலிருந்தெல்லாம் நம்மை நாம் முற்றிலும் காலி செய்து கொள்வோம்.
அது மட்டுமல்ல; மனரீதியாக நாம், புனிதம் என்று போற்றும் எல்லாவித மதங்கள், கடவுள்கள், மூட நம்பிக்கைகள், தொன்று தொட்டு கடைப்பிடித்து வரும் பரம்பரை பழக்க வழக்கங்கள், சாதிசமயங்கள் ஆகியவற்றிலிருந்தெல்லாம் விடுபட வேண்டும். அதனால், ஒரு வேளை, முதல் தடவையாக, நம் பிறப்புக்குப்பின், நாம் மறுபடியும், சுத்தமாக துலக்கப்பட்டிருப்போம் - மனரீதியாக. அதனால், நமக்கு மனோபலம் கூடி தயாராயிருப்போம் இவ்வாழ்க்கையை முற்றிலும் ஒரு புதிய கோணத்திலிருந்து பார்த்து அதை அப்படியே புரிந்துகொள்ள, மற்றும் நேரடியாக யார் துணையுமின்றி, நம்மை நாமே புரிந்துகொள்ள.
இவ்வுலகில், எதைத்தெரிந்துகொள்ளவும், கற்றுக்கொள்ளவும், நமக்கு ஒரு ஆசிரியர் - குரு - தேவை. ஆனால், வாழ்க்கையை சரியாக புரிந்துகொள்ள குரு யாரும் தேவையில்லை. அதனால் தான் அது 'தன்னைத் தான் அறிதல்' என்று புகலப்படுகிறது. அதனால், யாரும் குரு அல்ல; யாரும் சீடனும் அல்ல. நாம் உண்மையாயும், உறுதியாயும், தேவையான தாகத்துடனுமிருந்தால். நமக்கு வாழ்க்கையில் விழும் அடிகளிலிருந்தும், இயற்கையை ஊன்றி கவனிப்பதிலிருந்தும், நம்மைச் சுற்றி நடப்பவற்றை உன்னிப்பாய் பார்ப்பதிலிருந்தும், நாமே சுயமாக நிறைய கற்றுக்கொள்ள ஆரம்பித்து விடுவோம் நாமே சீடர்கள்; நாமே ஆசிரியர்கள்.
வாழ்க்கை என்பது என்ன? இடைவிடாது எப்பொழுதும் ஓடிக்கொண்டேயிருக்கும் ஒரு காட்டாறு அது. ஒரு குறிப்பிட்ட நேரத்தில், ஒரு குறிப்பிட்ட இடத்தில் நாம் பார்த்த அதே தண்ணீரை அடுத்த வினாடி நாம் அதே இடத்தில் பார்க்க முடியாது. சென்ற வினாடி நாம் பார்த்த தண்ணீர் அந்த இடத்தை விட்டு நிரந்தரமாகச் சென்றே விட்டது. அதனால், வாழ்க்கையை அப்படியே புரிந்துகொள்ள, நாம் அதனுடன் தோளோடு தோள் நின்று, இணைந்து செல்ல வேண்டும்; மக்கிப்போன பழைய மூடநம்பிக்கைகள், பழக்கவழக்கங்கள், யாரோ சொன்ன சொற்கள், நடை முறைகள் இவற்றிலெல்லாம் கிடந்து குட்டையாய் தேங்கி விடாது, வினாடிக்கு வினாடி நம்மை நாம் புதுப்பித்துக்கொண்டேயிருக்க வேண்டும். நாம் வாழ்க்கையோடு சுருதி சேர வேண்டும்; அப்போது ஒரு வேளை வாழ்க்கையை உள்ளபடியே புரிந்து கொள்ள ஒரு சந்தர்ப்பம் நேரலாம்.
நியாயமான முடிவுகள் சில இருக்கின்றன. அவை வெறும் கண்டுபிடிப்புகள் அல்ல; ஆனால் உண்மைகள். அந்த உண்மையை உள்ளபடியே உணர நமக்கு வேண்டியதெல்லாம் நிதானம், பொறுமை, விருப்பம், கொஞ்சம் புத்திசாலித்தனம்; அவ்வளவே. சமஸ்க்ருதம், லத்தீன், ஆங்கிலம், தமிழ், ஹிப்ரூ, உருது, அரபு, போன்ற மொழிகளில் ஆளுமை தேவையில்லை. சிறிதே சிறிது புதிதான சிந்தனை நிறைவான வெளிச்சத்தை கொடுத்து உள்ளடங்கியிருக்கும் உண்மையை மேலே கொணர உதவலாம். அவை -
நாம் இந்த உடலோ, மனதோ அல்லது புத்தியோ இல்லை. எப்படி இதை நாம் அறுதியிட்டு கூற முடியும்? என்னிடமுள்ளவற்றைப்பற்றி குறிப்பிடும் போது நான், "இது என் சட்டை, என் கண்ணாடி, என் கைக்குட்டை" என்றே கூறுகிறேன். ஆனால், 'அவையெல்லாம் என்னுடையவையே அன்றி நான் அவைகளில்லை' என்பது அனைவரும் உணர்ந்த உண்மை. அம்மாதிரியே, நாம் நம் உடல், மனம், புத்தி இவற்றைப்பற்றிக் குறிப்பிடும் போது, "என் உடல், என் மனம், என் புத்தி" என்றே கூறுகிறோம். அதனால், வெகு சுலபமாக நாம் சரியான முடிவுக்கு வரலாம் "இவையெல்லாம் என்னுடையவை அவ்வளவே; ஆனால் இவைகளே நானில்லை" என்று. அதனால், "நான்" என்பது இவற்றிலிருந்தெல்லாம் வேறுபட்டது. ஆனால், குழந்தைப்பருவம் முதலே நாம் இவற்றோடெல்லாம் அடையாளப் படுத்திக்கொண்டு விட்டதனால், இப்பொழுது நான் என்னைப்பற்றி நினைக்கும் போதெல்லாம், என் உடல், என் மனம், என் புத்தி இவற்றோடு என்னை இணைத்தே நினைக்கிறேன்.
அதனால், நானிந்த உடல், மனம், புத்தி இல்லை என்றால், உண்மையில் நான் யார்? எது ஒன்று இல்லையென்றால் (உயிர்ச்சக்தி) நம் கண்கள், காதுகள், மூக்கு, வாய், நாக்கு மற்றும் தோல் இவையெல்லாம் இருந்தும் தம் தம் கடமைகளை அவை செய்யாதோ அதுவே உண்மையான "நான்". அதுமட்டுமில்லாமல், பார்க்கப்பட்டவை, முகரப்பட்டவை, ருசிக்கப்பட்டவை, கேட்கப்பட்டவை, உணரப்பட்டவை இவையெல்லாவற்றையும் சரியாக புரிந்துகொள்ள அறிவு அவசியம். ஆகையால், உயிர்ச்சக்தி+அறிவு இவ்விரண்டும் இணைந்ததே "நான்".
உதாரணமாக, கும்மிருட்டில் 'நாமிருக்கிறோம்' என்பதை தெரிந்து கொள்ள விளக்கு தேவையில்லை. எந்தவித வெளி உபகரணங்களுமில்லாது, வெகு சாதாரணமாய், நாமிருப்பது நமக்கு சுலபமாய்த் தெரிகிறது. அந்த உணர்வே உண்மையான "நான்"; மறுபடியும் அது எங்கும் நீக்கமற நிறைந்திருக்கும் பேராற்றலின் ஒரு மிக நுண்ணிய துளியே; அந்த பேராற்றல் நமக்கு தெரிந்தவற்றிற்கெல்லாம் அப்பாற்பட்டது - பேரறிவானது - தலையாயது - உருவமில்லாதது - பெயரில்லாதது - வாசமில்லாதது - எங்கும் நிறைந்தது - எதிலுமுள்ளது - எதுவாகவுமுள்ளது - ஐம்புலன்களுக்கும் எட்டாதது - உணர மட்டுமே கூடியது.
'நான்' என்பது ஒன்றுமேயில்லைதான்; அது ஒரு உணர்வு. எதையெல்லம் 'நான்' என்று நினைத்துக் கொண்டிருந் தோமோ அதெல்லாம் 'நான்' இல்லையென்றான பிறகு ஒரு வெறுமை தோன்றுகிறதல்லவா? அந்த வெறுமையை எது நமக்கு உணர்த்துகிறது? அந்த வெறுமையை உணர நமக்கு 'உயிர்' என்ற ஒன்றும், கூடவே 'அறிவு' என்ற ஒன்றும் இருக்க வேண்டுமல்லவா? அந்த 'உயிர்+அறிவு' தான் 'நான்'. அந்த 'நான்' எல்லா சேதன மற்றும் அசேதன பொருட்களிலும் உள்ளது; விகிதாசாரத்தில் வேண்டுமானால் வித்தியாசப்படலாம். உதாரணத்திற்கு, 'நான்+அறிவு' நம்மிடத்தில் (மனிதர்களிடத்தில்) உள்ளளவு விலங்குகளிடத்தில்இல்லை. அதைவிட, குறைவாக தாவரங்களிடத் திலிருக்கிறது. அதையும் விட வெகு குறைவாக கல், மண், உலோகம், கோள்கள் மற்றும் பஞ்சபூதங்கள் ஆகியவற்றில் உள்ளது. அதானாலேயே, அனைத்துமே ஒன்றிலிருந்து தோன்றியவைதான் அல்லது, இன்னும் சரியாக சொல்ல வேண்டுமானால், ஒன்றே ஒன்றுதான் பலவிதமாக தோற்றமளிக்கிறது என்ற நியாயவாதத்திற்கு உட்பட்ட முடிவுக்கு வருகிறோம்.
அதனால், நம்மால் பார்க்க, கேட்க, முகர, ருசிக்க, பேச, நினைக்க மற்றும் உணரப்படுகின்ற அனைத்தும் ஒன்றே ஒன்றிலிருந்து ஜனித்தவைதாம்; அப்படியே, நாமும் அந்த ஒன்றிலிருந்து வந்தவர்கள்தாம். அந்த ஒன்று சத்தியமாக, நிச்சயமாக, மனிதனால் 'கடவுள்' என்று நம்பப்படும் இராமர், கிருஷ்ணர், ப்ரம்மா, விஷ்ணு, சிவன், அனுமான், அல்லா, ஏசு கிறிஸ்து, நபிகள், புத்தர், ஈஸ்வர் போன்றவர்கள் இல்லை. அது நமக்கு தெரிந்தவற்றிற்கெல்லாம் அப்பாற்பட்டது - மௌன சாட்சியாக அனைத்தையும் பார்த்துக் கொண்டும், அனைத்தினுள்ளும், புறமுமிருந்து கொண்டு, எதிலும் தன்னை ஈடுபடுத்திக்கொள்ளாதது; எல்லோரிலும், எல்லாவற்றிலும் நடுநாயகமாக வீற்றிருப்பது.
நாம் யாரும் இங்கே ஆயிரக்கணக்கான வருடங்கள் இருக்கப்போவதில்லை. நம்முடைய அதிகபட்ச ஆயுள் 90 அல்லது 100 வருடங்கள்தாம். நாம் அனைவரும் அந்த ஒன்றிலிருந்து ஜனித்தவர்களாதலால் மறுபடியும் அந்த ஒன்றிலேதான் திரும்ப ஒடுங்கப்போகிறோம். (அதனால்தான் இறந்தவரை 'இயற்கை எய்தினார்' என்று கூறுகிறோம்). பிறப்பதற்கு முன் எங்கிருந்தோமோ அங்கேதான் இறந்த பின்னுமிருப்போம் இது வெறும் நம்பிக்கையல்ல; இயற்கையை உற்று நோக்கி, ஆராய்ந்து கண்ட உண்மை. ஆம், அனைத்து கோள்களின் வடிவங்கள், அவற்றின் சுழற்சிப் பாதை, மேலும் மனித மற்றும் உயிரின சரித்திரம் இவையனைத்தும் ஒன்றைத்தான் திட்டவட்டமாய் கூறுகின்றன; அது, முடிவே ஆரம்பம் - ஆரம்பமே முடிவு. வட்டத்திற்கோ, நீள் வட்டத்திற்கோ ஆரம்பமும், முடிவுமில்லை அல்லவா? அதனால்தான், எதிலிருந்து அனைத்தும் உண்டானதோ - தவறு, எது அனைத்துமானதோ அவை முடிவில் அதுவாகவே ஆகும் அதுதான் இயற்கை. இயல்பாய், தர்க்கவாததிற்கும் உட்பட்டதாயுள்ள உண்மை. அதனால், அந்த யாராலும் தவிர்க்க முடியாத இறப்பைப் பற்றி நாம் தேவையில்லாமல் கவலைப்பட வேண்டாம். பிறக்கும்போது எதையும் எடுத்துவராது வந்தது போலவே இங்கிருந்து செல்லும் போதும் எதையும் எடுத்து செல்ல முடியாது - எவ்வளவு பெரிய சக்கரவர்த்தியாயிருந்தாலும் சரி - இதுவும் தவிர்க்க முடியாத பேருண்மை.
அதனால், குழப்பம் முதலிலுமில்லை; முடிவிலுமில்லை, ஆனால் நடுவில்தான் - அதாவது வாழ்க்கையிலும் வாழ்வதிலும்தான். ஒரு தடவை, ஒரே ஒரு தடவை தெள்ளத்தெளிவாக, சுயமாக, ஆழமாக, மேற்சொன்ன உண்மைகளையெல்லாம் நன்கு சிந்தித்து புரிந்துகொண்டு விட்டால், "இவ்வுலகில் எதுவுமே நிரந்தரமில்லை; ஆதலால், நிரந்தரமில்லாத உலகில், நிரந்தரமில்லாத நாம், நிரந்தரமில்லாத எதையும் - அது பெண்ணாயிருக்கட்டும், பொன்னாயிருக்கட்டும், பெயர், புகழ், பணமாயிருக்கட்டும், பதவியாயிருக்கட்டும் - துரத்திக் கொண்டு ஓடவேண்டிய அவசியமில்லை" என்ற சரியான முடிவிற்கு வந்துவிடுவோம். ஏனென்றால், சிறிதும் ஈவிரக்க மில்லாத - கொடிய - நம் அனைத்து கர்மங்களையும் திடீரென்று முன்னறிவிப்பு என்பது சிறிதுமின்றி நிறுத்திவிடுகின்ற - நாகரிகமில்லாத - தவிர்க்கவோ, தள்ளிப்போடவோ முடியாத - அந்த மரணம் நிகழும் போது, நாம் வெகு கஷ்டப்பட்டு சம்பாதித்த அனைத்தையும், அப்படியப்படியே விட்டு விட்டு, சிறிதும் தாமதிக்காமல், நாம் மறைய வேண்டியதுதான், நாமிருந்த அடையாளம் கூட தெரியாதபடி.
இங்கிருந்து, முகமலர்ச்சியுடனும், எவ்வித ஆர்பாட்டங்களுமின்றி, நிறைவோடும், நினைவோடும், மறைய, நம்மை நாம் மனரீதியாக இந்த வினாடியே தயார் செய்து கொள்ள வேண்டும். எப்படியென்றால், கோடானுகோடி வருடங்களாய் உள்ள, கோடானுகோடி வருடங்களாய் இன்னும் இருக்கப்போகிற இவ்வுலகம், நேற்று வந்து-இன்று இருந்து-நாளை போகப்போகும் நாம், வெறுமே வந்து, சிறிது நாள் விருந்தினராய் தங்கி விட்டு செல்கின்ற ஒரு பொழுதுபோக்கு இடமேயன்றி வேறில்லை; நம் உறவுகள் - கணவன்-மனைவி, அண்ணன்-தம்பி, அக்காள்-தங்கை, பெற்றோர்-பிள்ளைகள், காதலன்-காதலி, முதலாளி-தொழிலாளி, முதலிய அனைத்தும் - மிக மிக குறுகிய காலமேயுள்ள, சாஸ்வதமேயில்லாதவை என்றும், அனைத்திற்கும் மேலாக, யாருக்கும், எப்போதும், எதுவும் நடக்கலாமென்பதையும் நம் நினைவில் சதா நிறுத்தி வைத்துக் கொள்ளவேண்டும்.
ஆதலால், நாமெல்லோரும், எந்த ஒன்றின் பின்னமாக திகழ்கிறோமோ அந்த ஒன்றின் இசைக்கு ஏற்ப நடனமாடும் பரிதாபமான, கையாலாகாத ஜீவன்கள். இந்த நியாயவாதத்திற்கு உட்பட்ட முடிவு, எதையும் ஆர்பாட்டமில்லாமல் அப்படியே ஏற்றுக் கொள்ளும் மன உறுதியையும் மனப்பக்குவத்தையும் நமக்கு கொடுக்கும்; மற்றும் நம் மனதிற்கு பிடிக்காத எந்த ஒரு நிகழ்வையும் எதிர்த்து தேவையில்லாமல், பிடிவாதமாக, சண்டை போடும் குணத்தை கைவிடச்செய்யும்; ஏனென்றால், அந்த சண்டை போடும் நேரத்தில் - கடைசியில் நாம் வெற்றி பெறுகிறோமோ அல்லது தோல்வி யடைகிறோமோ - நமக்கே தெரியாமல் நம் வாழ்க்கை நம் கை நழுவிப் போய்விட்டிருக்கும்.
அதனால், இந்த உண்மைகளை நாம் நன்கு உணர்ந்த கணமே, இங்கு நாம் வாழும் வரை ஒரு நல்ல, நியாயமான, மகிழ்ச்சியான வாழ்க்கையை வாழ்வோம். எவ்வாறென்றால்,
* • மற்றவர்க்கு எந்த விதத்திலும் தொல்லையாயிருக்க மாட்டோம்;
* • மற்றவரின் மனதை புண்படுத்த மாட்டோம்;
* • மற்றவரின் சுதந்திரத்தில் தலையிடமாட்டோம்;
* • மற்றவரின் பொருளுக்கு ஆசைப்பட மாட்டோம்;
* • மற்றவரைப்பற்றிய தப்பெண்ணத்தோடு அவரைப் பழி வாங்கும் நோக்கத்தில் செயல்பட மாட்டோம்;
* • நம் மனதிற்குப் பிடித்த நியாயமான வேலையை முழுமனதுடன் செய்து அதில் வரும் நியாயமான வரும்படிக்குள் வாழ்க்கை நடத்துவோம்;
* • துன்பத்திலிருப்போரின் துயரை நம்மால் முடிந்தளவு சரீரத் தாலோ/ பொருளாலோ/ பிரார்த்தனையாலோ - துடைப்போம்;
* . நாம் உண்பதற்காக ஒரு உயிரை கொல்லாதிருப்போம்;
* மொத்தத்தில், மற்றவர் நம்மிடம் எப்படி நடந்து கொள்ள வேண்டுமென்று எதிர்பார்க்கிறோமோ அப்படியே நாம் மற்றவரிடம் நடந்து கொள்ளுவோம்;
* • அற்பமான பொன், பொருள், பெயர், புகழ், பதவி, பெண்/ஆண்-இச்சை, இவற்றின் பின்னெல்லாம் ஓயாது ஓட மாட்டோம்; ஆனால், அதே சமயம், மேற் சொன்னவற்றுள் எது, அதுவாக, நம் பாதையில் குறுக்கிட்டாலும் அதை, நியாயமாக, ஒழுங்கு முறை மாறாது, அளவாக, அனுபவிப்போம். சரியாக சொல்ல வேண்டுமென்றால், நாம் இவை எவற்றின் பின்னாலும் வெறி பிடித்து ஓடவும் மாட்டோம்; இவற்றில் எது தானாக நம் வழியில் வந்து குறுக்கிட்டாலும் விலகி ஓடவும் மாட்டோம்.
இதற்குள், நாமும், "பெயர், புகழ், பணம், உடலுறவு, சொத்து இவற்றின் மீதான நம் இச்சை/தாகத்தை சிறிதும், எக்காலத்திலும் தணிக்க முடியாது என்பதையும், எவ்வௌவுக்கெவ்வளவு நாம் இவற்றை அனுபவிக்கிறோமோ அவ்வளவிற்கவ்வளவு அவற்றின் மீதான நம் இச்சையும் கூடிக்கொண்டே யிருக்கும் என்பதையும், நாம் அவற்றை துரத்துவது நிற்காது என்பதையும், மேலும் அது ஒரு முடிவேயில்லாத ஒரு ஓட்டப் பந்தயம்" என்பதையும் புரிந்து கொண்டிருப்போம். நாம் இவற்றையெல்லாம் வெறுத்துவிட்டாற் போல வெளிக்கு காட்டிக் கொண்டாலும், உள்ளுக்குள் அவற்றை இன்னும் அனுபவிக்க வேண்டுமென்ற இச்சை, நீரு பூத்த நெருப்பாய் கனன்று கொண்டே யிருக்கும்.
மேற் கூறியபடி நாம் வாழ்க்கையை புரிந்து கொள்ளாதவரை, நம்மால் அவற்றிற்கான தாகத்தை தடுக்கவோ அல்லது அவ்விச்சைகளை முழுதுமாய் மனதார துறக்கவோ முடியாது. துறவு என்பது ஒரு நல்ல மன நிலைதான்; ஆனால், அது முயற்சியினாலோ அல்லது திறமையினாலோ அடையப்படுவது அல்ல; சரியாக வாழ்க்கையைப் புரிந்து கொள்வதினால் அழகாக, அமைதியாக, தானாக உண்டாவது.
வாழ்க்கையை சரியாக புரிந்து கொண்டுவிட்டால், நாம் அனைவரையும், எந்தவித எதிர்பார்ப்புமில்லாது, எந்தவித முன் சட்டதிட்டங்களுமில்லாது, முழு மனதோடு, நேசிக்க ஆரம்பித்து விடுவோம்; அது மட்டுமல்ல, மல்லிகை, எந்த எதிர்பார்ப்புமில்லாது, தன் நறுமணத்தை, யார் போற்றுதலையும், தூற்றுதலையும் பாராட்டாது, யாரும் கேட்காது, வீசிக்கொண்டிருப்பது போல, நம்முள் தளும்பி வழியும் அன்பையும், கருணையையும், நம்மிடமே வைத்துக்கொண்டிராமல். அவற்றை நம்மைச் சுற்றியுள்ள அனைவருடனும் பகிர்ந்து கொள்வோம்.
நாம் நம் தற்போதைய நிலைமையிலேயே முழுதும் திருப்தியாயிருப்பதால், எதிர்காலத்தைப் பற்றிய எந்தவித எதிர்பார்ப்புகளும், சூதாட்ட கணிப்புகளுமின்றியும், கடந்த காலத்தைப் பற்றிய அனாவசிய ஏக்கங்களும். வருத்தங்களுமின்றியும், சதா சர்வ காலமும் நிம்மதியாயிருப்போம். முன்போல் கடந்த கால மற்றும் எதிர்கால நினைப்புகளில் சிக்கித் திணறி நிகழ்காலத்தையும் அதனால் கூடவே வாழ்க்கையையும் நம்மையறியாமல் கோட்டை விட்டு விடாமல், அதை முழுதுமாய், வினாடிக்கு வினாடி அனுபவித்து வாழ்வோம்.
எப்பொழுதும், துன்பத்தில் உழல்வோருக்கு, பொருளளவிலேயோ, உடலளவிலேயோ, சில சமயம், மனதளவிலேயோ, உறுதுணையாயும், உதவியாயுமிருப்போம். வாழ்க்கையை அதன் போக்கில் வாழ ஆரம்பித்து விட்டதனால், நாம் எந்த பெரிய எதிர்கால திட்டங்களும் தீட்ட மாட்டோம். நமக்கென்று நாம் பெரிய லட்சியங்கள். அடைய வேண்டிய சிகரங்கள் என எதையும் தீர்மானித்துக் கொள்ள மாட்டோம். பறவைகள் போல, எதிலும் பிணைக்கப்படாமல், எதனாலும் கட்டிப்போடப்படாமல், எப்போதும் சுதந்திரமாயிருப்போம். நம் பாதையில் எது எதிர்பட்டாலும் அதை முழுதுமாய் அனுபவிப்போம் - பிறப்பு, இறப்பு, திருமணம், பதவி உயர்வு/தாழ்வு, புது வீடு, புது கார், லாபம், நஷ்டம், உடலுறவு, மது, வலி, எதுவானாலும் சரி - ஆனால், அதே சமயம், நாம் நம் பாதையை விட்டு விலகிச் சென்று அவற்றை அனுபவிக்க முயலமாட்டோம். வேறு விதமாய்ச்சொல்ல வேண்டுமென்றால், நாம் இவ்வித அற்ப விஷயங்களுக்கான ஆசையை, அனுபவிக்க வேண்டுமென்ற வெறியை முழுதுமாய் துறந்திருப்போம். நாம் வெற்றிகளுக்காக மகிழ்ச்சியோ தோல்விகளுக்காக வருத்தமோ கொள்ளமாட்டோம்.
நாம் நதியின் - வாழ்க்கையின் - நீரோட்டத்துடனேயே போய்க் கொண்டிருப்போம்; எங்கு, யாருடன், எப்போது போவதென்று நமக்கென்று சொந்தமாக எந்தவித தீர்மானங்களும் இல்லாதிருப்போம். எல்லாவற்றையும் நாம் வாழ்க்கைக்கு விட்டுக் கொடுத்து விடுவோம்; அது பத்திரமாய் நம்மை எங்கு, எப்போது சேர்க்க வேண்டுமோ அங்கு, அப்போது கொண்டு சேர்த்துவிடும். ஆதலால், நாம் யார் பேசுவது, சிந்திப்பது பற்றியும் கவலை கொள்ளமாட்டோம். எப்போதும் நாம் திருப்தியுடனிருப்பதால் அமைதியாகவே இருப்போம்.
எப்போதும் நாம் திருப்தியுடனிருப்பதால், நாம் கடவுளைத் தேடமாட்டோம்; ஏனென்றால் திருப்திதான் கடவுள். நாம் வாழ்க்கையிலிருந்து எதையும் எதிர்பார்க்காததால், பிரார்த்தனை நமக்கு தேவையிருக்காது. நாம் எப்போதுமே அமைதியுடனிருப்பதால் பிரத்தியேகமாக தியானம் செய்ய நமக்கு தேவையிருக்காது.
வாழ்கையின் ஒவ்வொரு வினாடியையும் நாம் ரசித்துக்கொண்டிருப்போம் - இயற்கை தந்த பரிசுகளான, பெரிய மலைகள், ராட்சத நீர்வீழ்ச்சிகள், கருநீலக் கடல், மேகங்கள்,பனி, பூந்தோட்டங்கள், பசுமை நிறைந்த வனங்கள், பூக்கள், பரந்த வானம், உதிக்கும் மற்றும் மறையும் சூரியன், முழு மற்றும் பின்ன நிலாக்கள், பறவைகளின் 'கீச்சு கீச்சு'க்கள். காற்று வீசும் சப்தம், மழை, தூறல், மண்வாசனை, போன்றவற்றை மட்டுமல்ல, மனிதனால் படைக்கப்பட்டுள்ள வானுயர் கட்டிடங்கள், சிலைகள், கோவில்கள் மற்றும் அவற்றின் அழகிய வேலைப்பாடுகள், ஓவியங்கள், மனதை வருடும் இசை, ஆகியவற்றையும், "இந்த ஒரே ஒரு முறை வாழப்போகும் வாழ்க்கை அந்த 'யாருமறியாத' வனால் நமக்கு பிரத்தியேகமாக அளிக்கப்பட்ட, விலைமதிக்க முடியாத பரிசு" என்பதை எப்போதும் மறவாமல். ஆதலால் இந்த வாழ்க்கையை நாம் தேவையில்லாத சில்லறை சண்டைகளிலும், மற்றவரோடு நம்மை ஒப்பிட்டுக் கொள்வதிலும், எதை எதையோ எப்பொழுதும் தேடிக்கொண்டிருப்பதிலும், தொலை தூரத்தில் இலக்கு ஒன்றை நாமே நிர்ணயித்துக் கொண்டு அதை எட்டிப் பிடிப்பதற்காக எப்போதும் ஓடிக்கொண்டெயிருப்பதிலும் ('இருக்குமிடத்தில் இருக்கவே நாம் ஓடிக் கொண்டேயிருக்க வேண்டும்' என்ற கூற்றை கூறி நம்மை நாமே ஏமாற்றிக்கொண்டவாறு) செலவழித்துவிட்டு, வாழ்க்கையை வாழாமல் நம்மையுமறியாமல் தொலைத்துவிடமாட்டோம்.
நல்ல நகைச்சுவைக்கு மனமாற சிரிப்போம்; மற்றும் நல்ல நகைச்சுவையை நாமும் படைத்து மற்றவர்களையும் சிரிக்க வைப்போம்; 'சிரிப்பு' என்பது மனித குலத்துக்கு மட்டுமே இயற்கையால் அளிக்கப்பட்ட வரப்பிரசாதம் என்பதை சிறிதும் மறவாமல்.
வாழ்க்கை மிகவும் சுவையானது; அதே சமயம் மிகவும் சுருக்கமானது. அது சுருக்கமாயிருப்பதால் தான் சுவையாயுள்ளது; சுவையாயுள்ளதால்தான் சுருக்கமாயுள்ளது. ஆதலால், காற்றடிக்கும் போதே தூற்றிக் கொள்வோம். எல்லாம் முடியும் நேரத்தில் வருத்தப்பட்டு பயனில்லை. நம் கண் முன்னேயே வாழ்க்கை முடிந்து கொண்டிருக்கிறது. உருகி ஓடிக் கொண்டிருக்கிறது. ஒரே ஒரு முறையே நாமிங்கு வாழப்போகும் வாழ்க்கை - அழகாக, யாருக்கும் தெரியாமல், மெல்ல, மெல்ல, நிதானமாய் - நம் சவக்குழியை நோக்கி நம்மை அழைத்துச் செல்லும் ஒரு பிரயாணம். அதனால், நாம் பரந்த பாலைவனத்தில் எந்த ஒரு பாதுகாப்புமில்லாமல், பயமுமில்லாமல், நிராயுதபாணியாய், நிர்வாணமாய் நிற்போம்.
பாதுகாப்பின்றி இருப்பது பயத்தை உண்டாக்கும்தான்; ஆனால் பாதுகாப்பு இரட்டிப்பு பயத்திற்கு காரணமாகிறது. நம் பாதுகாப்பிற்கு ஏதாவது பங்கம் வந்து விடுமோவென்று எந்நேரமும் பயந்தபடி நாம் பாதுகாப்பாக இருக்கிறோம். அதனால், பாதுகாப்பே தேவையில்லாத பயத்திற்கும் காரணமாகி விடுகிறது. அதனால், பாதுகாப்பு, எதிர்காலத்தைப் பற்றிய தேவையில்லாத கவலைகள், இவற்றை நம் மேல் பெரும் பாரமாக ஏற்றிக்கொண்டு நம்மை நாமே துன்புறுத்திக் கொள்ள வேண்டாம்.
நாம் ஒன்றுமேயில்லை என்று தெரிந்து கொண்ட வினாடியே, நாம் நமக்கே வெகு வெகு சாதாரணமான, முக்கியமேயில்லாதவர்களாக ஆகிவிடுகிறோம்; அதனால், நம் வாழ்க்கையும் நமக்கு முக்கியமில்லாததாகி விடுகிறது. பிறகு, நம் தோளில் எந்த சுமையையும் ஏற்றிக்கொள்ள நாம் விரும்புவதில்லை வாழ்க்கை என்னும் இரயில் பயணத்தை - தேவையில்லாத, பெரிய கவலைகளை - சரக்குப் பெட்டியில் போட்டுவிட்டு, தேவையான, வெகு சொற்பமான, கையிலேந்தி செல்லக்கூடிய, சரக்குகளை (அன்றன்றைக்கு ஆற்ற வேண்டிய, உபயோகமான, வாழ்க்கையை மேலும் சுவாரஸ்யமாக்கக்கூடிய கடமைகளை) மட்டும் கூட எடுத்துக்கொண்டு - மகிழ்ச்சியாய்த் தொடருவோம் இறங்குமிடம் வரும் வரை.
அதனால், முதலில் நாம் நமக்கே முக்கியிமில்லாதவர்களாவோம். நாமும், நம் வாழ்க்கையும் நமக்கும் மற்றும் மற்றவர்களுக்கும் கூட முக்கியமேயில்லை. இந்த முக்கியமில்லாத் தன்மையை நாம் நன்குணர்ந்த கணமே, நம் வாழ்க்கை நமக்கு சுலபமாகச் செல்லும் படகாகிவிடுகிறது; நாமும், நம் வாழ்க்கையை நேசிப்பதற்கு பதில், நம் வாழ்க்கைப் பயணத்தை உற்சாகமாய் ரசிக்க ஆரம்பித்து விடுகிறோம். யாரிடமும் நமக்கு விரோதமிருப்பதில்லை; விரோதிகள் இல்லை; நாம் புத்தம் புதிய, சுத்தமான காற்றை சுவாசிக்க ஆரம்பிக்க, அது நம் இதயத்தையும், நுரையீரல்களையும் சுத்தப்படுத்த, நாம் என்றுமில்லாத வகையில் ஆரோக்கியமும், புத்துணர்ச்சியும் பெறுகிறோம். மனிதனால் உண்டாக்கப்பட்ட, இந்து, கிறிஸ்த்துவன், முகம்மதியன், பிராமணன், பிராமணனல்லாதவன், அமெரிக்க நாட்டவன், ரஷ்ய நாட்டவன், சைனாக்காரன், இந்தியன், ஜாதி, மதம், சமயம், இனம், மொழி, பிரதேசங்கள், எல்லைகள், பரம்பரை அந்தஸ்துகள், கௌரவங்கள், இன்னும் மற்றெல்லாமும் திடீரென்று மறைந்து, மொத்த உலகமும் ஒரு குடையின் கீழ் வருகிறது. எல்லா மனிதர்கள் மட்டுமல்ல, எல்லா உயிரினங்கள் மட்டுமல்ல, எல்லா சேதன-அசேதன பொருட்களும் நம் உற்ற உறவினர் ஆகிவிடுகின்றனர். எல்லாவற்றையும், எல்லோரையும். எந்தவித முன்-சட்ட திட்டங்களும், எதிர்பார்ப்புகளுமின்றி, நேசிக்கிறோம்.
நாமெல்லோரும் இங்கே, ஒருவொருக்கொருவர் உதவிக் கொண்டும், அன்பைப் பரிமாறிக்கொண்டும், சிரித்த முகத்துடன், மகிழ்ச்சியாய் வாழ்ந்து, இறப்பு வரும் போது அதை முகம் சுளிச்காமல், அமைதியாக அரவணைத்துக் கொள்வோம். நாம், மனிதன் படைத்த தேவையில்லாத கடவுள்கள் மற்றும் அவற்றின் கல்/உலோக உருவங்கள், மதம், சாதி, கோவில்கள், மூட நம்பிக்கைகள், மூட பழக்க வழக்கங்கள், இன்னும் பலவற்றினால் நம் வசமிழந்து அவற்றிற்கெல்லாம் அடிமையாகி, வாழ்க்கையைத் தொலைத்து விட வேண்டாம்.
போக வேண்டுமென்று தோன்றினால், கோவில்களுக்குச்செல்வோம்; ஆனால், கடவுளிடம் நம் குறைகளைச் சொல்லி அவற்றை நீக்கும்படி வேண்டிக்கொள்ள அல்ல; இந்த அழகான வாழ்க்கையை ஒரே ஒரு முறை வாழ நம்மைத் தேர்ந்தெடுத்ததற்கும் இன்னும் என்னவெல்லாம் நல்லது/கெட்டது அவர் மூலம் நடந்ததாக நாம் நினைக்கிறோமோ அவற்றிற்கெல்லாம் நன்றி சொல்லவும். வேண்டுமென்றால், எல்லா உயிரினங்களின் மொத்த நன்மைக்காக நாம் பிரார்த்தித்துக் கொள்ளவும் கூட கோவிலுக்குச் செல்வோம். அங்கு இசைக்கப்படும் சுலோகங்களையும், வேத கோஷங்களையும், பிரார்த்தனை கீதங்களையும், அவற்றின் ரம்மியமான சப்தத்திற்காக, ரசிப்போம்; ஏதாவது அதிசயங்கள் நம் வாழ்க்கையில் நிகழ்ந்து விடும் என்று எதிர்பார்த்து அல்ல.
சுருங்கச் சொன்னால், நாம் எதையும் எதிர்பார்த்து கோவிலுக்கு செல்ல வேண்டாம். பிரார்த்தனை செய்வதிலும், கோவிலுக்குச் செல்வதிலும் உண்டாகும் ஒரு மகிழ்ச்சிக்காக/ நிம்மதிக்காக மட்டும் நாம் இவற்றை செய்வோம். நாம் நேசிப்பதையெல்லாம் செய்வோம்; நாம் செய்வதை எல்லாம் நேசிப்போம். சரியாக சொல்ல வேண்டுமென்றால், நாம் கடவுளுக்கு பயந்தவர்களாக இல்லாமல் கடவுளை நேசிப்பவர்களாக இருப்போம்.
மேலும் நாம் புரிந்து கொள்ள வேண்டியது, இரவைத்தொடர்ந்து பகல், பகலைத் தொடர்ந்து இரவு என்பது போல், மகிழ்ச்சியைத் தொடர்ந்து சோகம், சோகத்தை தொடர்ந்து மகிழ்ச்சி என்பது தவிர்க்க முடியாத ஒன்றாகும். அதனால், நாம் வெறும் சந்தோஷத்தை துரத்திக் கொண்டு எப்போதும் ஓட வேண்டாம்; ஏனென்றால் அது கடைசியில் துக்கத்தில் தான் முடியும். அதே சமயம், அதற்காக நாம் சந்தோஷத்தையே துறந்து சதா துக்கத்திலேயே மூழ்கியிருக்க வேண்டுமென்பதில்லை. ஏனென்றால், நிச்சயமாக இவ்விரண்டுக்குமிடையே ஒன்றுள்ளது - சாந்தி. ஆனால், மறுபடியும், சாந்தியைத் துரத்திக்கொண்டு நம்மால் ஓட முடியாது. ஏனென்றால், சாந்தி என்பது தொடுவானம் போல் - எவ்வளவுக்கெவ்வளவு நாம் அதைத் துரத்திக்கொண்டு ஓடுகிறோமோ அவ்வளவுக்கவ்வளவு அது நம்மை விட்டு விலகிச் சென்று கொண்டேயிருக்கும். பிறகு நாம் என்ன தான் செய்வது? இருப்போம் - சும்மாயிருப்போம் - இருக்கிறபடியே இருப்போம் - மனதளவில், உடலளவிலல்ல.
நமக்கெல்லாம் தெரியும், ஒரு நல்ல இசையைக் கேட்க வேண்டுமென்றாலும் நமக்கு ஒரு அமைதியான மன நிலை வேண்டும். அம்மாதிரியே, வாழ்க்கையைப் புரிந்து கொள்ள, அல்லது உண்மையை/கடவுளை உள்ளபடியே உணர - இசையை அனுபவிப்பதைக் காட்டிலும் அது மிகக் கடினமான காரியம்; ஆனால் பிறப்பின் பயனே அதுதான் - நமக்கு நிச்சயமாக ஒரு மிக அமைதியான அசைவற்ற மனம் வேண்டும். ஆனால், துரதிர்ஷ்டவசமாக, மனம் சதா சலித்துக் கொண்டேயிருக்கும் ஒரு 'லொட-லொட' இயந்திரமாதலால், அதை அமைதிப் படுத்துவதோ, அசைவற்று இருக்கச்செய்வதோ முடியாத காரியம்; ஏனென்றால், மனதை அமைதிப்படுத்த வேண்டுமென்ற முயற்சியிலேயே, 'நான்' என்பதும், 'மனதை ஒருமுகப் படுத்த வேண்டும்' என்ற அந்த ‘நானி’ன் ஆசையும், மனதிற்கு வந்து விட்டது. 'நான்' முன்னுக்கு தள்ளப்பட்டுவிட்டாலே, மனம் கொந்தளிக்க ஆரம்பித்து விடும்; அதுவுமன்றி ஆசை, அது எவ்வளவு புனிதமானதென்றாலும், மனதை ஒருமுகப் படுத்துவதற்கு பரம எதிரி.
மனதை ஒருமுகப்படுத்த அல்லது அமைதிப்படுத்த எடுக்கப்படும் அனைத்து முயற்சிகளும் மனதை மேலும் குழப்புகின்றது; அல்லது அமைதியின்மையை அதிகரிக்கச் செய்கிறது. அதனால், எல்லாவித முயற்சிகளும் நிற்கும் போது அல்லது இல்லாமற் போகும் போது, தானாக 'நான்' காணாமற் போய் விடுகிறது. 'நான்' இல்லையென்றால், எண்ணங்கள் இல்லை; அக்கணமே மனது நிச்சலனமாகிறது. அவ்வாறு முயற்சியின்மையால் விளைந்த அசைவற்ற மனதாலேயே உண்மையை உள்ளபடி உணர முடியும்.
இவ்வுலகில் ஆயிரக்கணக்கான கேள்விகளுக்கு நமக்கு விடை தெரிய வேண்டும்; அந்த அளவுள்ள பிரச்சனைகளுக்கு தீர்வும் வேண்டும். ஆனால், நிச்சலனமான மனது அந்த விடைகளையும் தீர்வையும் நமக்குத் தராது; ஆனால், நிச்சயமாக விடைகளும், தீர்வும் தேவையில்லாத ஒரு நிலை நமக்குள் ஏற்படலாம்; ஏனென்றால் அச்சமயம் நமக்குள் எந்த கேள்விகளும் பிரச்சனைகளுமே இல்லாதிருக்கலாம்.
எங்கு தேடல் இல்லையோ அங்கு அமைதி/சாந்தி தன்னால் வந்தமைகிறது. 'நான்' இருக்குமிடத்தில் தேடல் இருக்கும். அதனால், எல்லா காரியங்களுக்கும் அடிப்படை 'நான்' தான்; 'நானை'ச் சுற்றி தான் அனைத்து நிகழ்வுகளும். 'நான்' தலை தூக்கியவுடன், தன்னால் 'நீ' வந்துவிடும்; தொடர்ந்து, 'அவன்', 'அவள்', 'அது' மற்றும் 'அவைகள்' எல்லாம் வந்துவிடும். நாம் நன்றாக கவனித்திருப்போம், எப்போதெல்லாம் நாம் ஒரு வேலையில் வெகு ஆழ்ந்து ஈடுபட்டிருக்கிறோமோ அப்போதெல்லாம் நம்மை நாம் மறந்திருப்போம் - அதாவது, நம்மையுமறியாமல் 'நான்' தொலைந்து போயிருக்கும். உதாரணமாக, நமக்கு மிகப் பிடித்த வேலையில் நாம் ஈடுபட்டிருக்கும் போது, இயற்கையை, நல்ல நம் மனதிற்குப் பிடித்த இசையை ரசிக்கும் போது, உச்சகட்ட கோபத்தில்/ஆழ்ந்த நித்திரையில்/ நல்ல உடலுறவில் ஈடுபட்டிருக்கும் போது, ஆழ்ந்த சிந்தனையில், உன்னிப்பாக எதையோ படிக்கும் போது, இப்படியாக. அதாவது, மிக ஆழ்ந்த தூக்கத்திலும், துக்கத்திலும், அளவுகடந்த மகிழ்ச்சியிலும் நாம் உள்ள போதெல்லாம் 'நான்' அங்கிருப்பதில்லை. ஆழ்ந்த தூக்கத்திலும், முழுமனதோடு நல்ல உடலுறவில் ஈடுபட்டிருக்கும் போதும் 'நான்' இல்லாதிருந்ததை பிறகு நினைத்துப் பார்த்தால் நமக்கு நன்கு விளங்கும். அதனால்தான், நாம் அடிக்கடி இவ்விரண்டு செய்கைகளிலும் மீண்டும் மீண்டும் ஈடுபடுகிறோம். கவனித்துப் பார்த்தால் தெரிந்திருக்கும் அப்போதெல்லாம் 'தேடல்' இருந்திருக்காது. ஆகவே, சாந்தி என்பது தேடலே இல்லாத போது தன்னால் அமையும் ஒரு நல்ல நிலை.
மறுபடியும், நம்மால் 'நான்' என்பதை அழித்து விடவோ, ஒதுக்கி விடவோ முடியாது; ஏனென்றால், 'நான்' என்பதை அழிக்க/ஒதுக்க வேண்டும் என்ற முயற்சியே 'நான்' ஆல் வந்ததுதான்; அதுவும் 'நான்' இல்லாவிட்டால்/காணாமற் போய்விட்டால் நாம் 'சாந்தி'யை ருசிப்போம்/ரசிப்போம் என்ற ஒரு முடிவை எதிர்பார்த்து வந்தது. அப்போது, நாம் செய்ய வேண்டுவது தான் என்ன? பிரச்சனையை நாம் சரியாகப் புரிந்து கொள்ள வேண்டும்; ஏனென்றால் அந்த 'புரிந்து' கொள்ளுவதிலேயே தீர்வும் உள்ளது.
நம் வாழ்க்கையில் நாம் எவ்வவற்றை இது வரை செய்து வந்தோமோ அவற்றை யெல்லாம் தொடர்ந்து செய்து வருவோம் , எந்த முடிவையும் எதிர்பார்க்காமல். எவற்றை செய்யாவிட்டால் நாம் தரையில் போடப்பட்ட மீனாய் துடித்துப் போவோமோ அவற்றையெல்லாம் பிரியமுடன், உண்மையாக, மனசாட்சிக்கு விரோதமில்லாமல் தொடர்ந்து செய்வோம், எந்தவித முடிவையும் எதிர்பார்க்காமல். ஏனென்றால் அது தான் சரியான, உண்மையான செய்கை - அதாவது சரியாக செயல்படுவது. அதுதான் நிகழ்காலத்தில் இருப்பது; 'இப்படியாக வேண்டும்; அப்படியாக வேண்டும்' என்ற எதிர்காலம் பற்றிய கனவுகள்/திட்டங்கள் இல்லாமலிருப்பது.
மேலும், நாம் எந்த செய்கையில் ஈடுபடும் போதும், எந்த நினைப்பில் மூழ்கியிருக்கும் போதும், ஒரு மூன்றாம் மனிதனாயிருந்தபடி நம் செய்கைகளையும் எண்ணங்களையும் கவனிப்போம் - அதாவது, நம் செய்கைகளுக்கும், எண்ணங்களுக்கும் நாமே சாட்சியாயிருப்போம். ஆரம்பத்தில், இது கஷ்டமாகத் தோன்றும். போகப்போக இது பழகிவிடும். இப்பழக்கம் நம்மை நிகழ்காலத்திலேயே எப்பொழுதும் இருக்கச்செய்யும். அதனால், நம் செயல்பாடுகள் தெளிவாக இருக்கும்; செயல்பாடுகளின் முடிவுகள் எவ்வாறிருப்பினும் அவை நம்மை எவ்வகையிலும் சிறிதும் பாதிக்காது.
உள்ளபடியே வாழ்க்கை மிக எளிமையானது; அதை குழப்புவது நாம் தான். அதனால், ஒரு எளிமையானதைச் சரியாகப் புரிந்து கொள்ள முதலில் நாம் எளிமையானவர்களாக வேண்டும். நம்மிடமுள்ள பொருட்களைத் தியாகம் செய்துவிடுவதாலோ, மிகச் சாதாரணமான, குறைந்தபட்ச உடை அணிந்து கொள்வதாலோ, நாம் எளிமையானவர்களாகிவிட முடியாது. நாம் எப்போது எளிமையானவர்களாவோமென்றால், பணப்பற்று, அந்தஸ்துப்பற்று, பதவி மோகம், சாதி/ சமய/ இன /மதப் பற்று, மொழிப்பற்று, தேசப்பற்று, போன்றவற்றிலிருந்தெல்லாம் நாம் விடுபடும் போதுதான். அப்போது, சிறிதும் எதிர்பாராமல், திடுதிடுப்பென்று, நாம் உண்மையை நேருக்கு நேர் சந்திப்போம் - அந்த உண்மை வேறெதுவுமில்லை - நாம் ஒன்றுமேயில்லை என்பதுதான்.
நமக்கெல்லாம் நன்றாய்த் தெரியும் உண்மை எப்போதுமே மிகவும் கசக்கும் என்பதும் அதனால் அதை நாம் சுவைக்க விரும்ப மாட்டோம் என்பதும். உண்மை, இதுவரை நம்மைப் பற்றி நாம் நினைத்து வந்ததற்கும் கற்பனைப் பண்ணிக்கொண்டிருந்ததற்கும், மிகவும் எதிரானது. இதுவரை நாம் நம்மைப் பற்றி பலவிதமாய் நினைத்துக் கொண்டிருந்தோம்; ஆனால், உள்ளபடியே நாம் 'ஒன்றுமில்லை; வெறும் பூஜ்யம்' என்பது தெரியும் போது நாம் மிகவும் பயப்படுகிறோம் அந்த உண்மையை நேருக்கு-நேர் எதிர் கொள்ள; ஏனென்றால், நாம் நம் தனித் தன்மையை இழந்து, விலாசமில்லாமல், காணாமற் போய்விடுவோமோ என்பதால். வேறு விதமாய் சொல்ல வேண்டுமென்றால், நம் தனித்தன்மையையும், அடையாளத்தையும் இழப்பதற்கு நமக்கு துணிவில்லாததால், சம்மதமில்லாததால், உண்மையுடனான நம் 'நேருக்கு-நேர் சந்திப்பை' நாம் தள்ளிப் போட விரும்புகிறோம்.
அதனால்தான் நாம், மேலும் மேலும் பணம் ஈட்டுதல், எதையதையோ அடைய பாடுபடுதல், இப்படி ஆக வேண்டும் அல்லது அப்படி ஆகவேண்டுமென்று கஷ்டப்படுதல், சிற்சில மந்திரங்களை/ ஸ்லோகங்களை உச்சாடனம் செய்தல், மற்றவரிடமிருந்து மாறுபட்டுத் தெரிய வித்தியாசமாக உடையணிதல், தலை முடியை வித்தியாசமாக வெட்டிக்கொள்ளல் அல்லது மழித்துக் கொள்ளல் அல்லது நீட்டமாய் வளர்த்துக் கொள்ளல், நெற்றியில் ஏதாவது பூசிக் கொள்ளல், தியானம் பண்ணுவதற்காக ஒரு அறையில் அமர்ந்து கதவை மூடிக்கொள்ளல், ஏதாவது பூஜை செய்தல், புனித இடம் என்று நாம் நம்பும் இடங்களுக்கு ஷேத்திராடனம் செல்லல், எதையோ அடைய அசாதரணமான விரதங்கள் இருத்தல், பலி கொடுத்தல் என்று பலவித காரியங்களில் ஈடுபடுகிறோம்; ஆனால், உள்ளபடியே இவையெல்லாம் நம் 'நான்' என்னும் எண்ணத்திற்கு தேவையில்லாமல், இன்னும் அதிகமான முக்கியத்வம் கொடுத்து விடுகின்றன; அது கர்வமாய்/அகம்பாவமாய் வடிவெடுத்து நம் எல்லா காரியங்களிலும் பிரதிபலிக்கிறது.
ஆனால், நியாயமாக, 'நான்' நினைப்பு அறவே அகன்றால்தான் சலனமில்லாத மனம் உதிக்கும்; அது ஒன்றால்தான் சரியாக, உள்ளபடியே, நம்மை நாம் புரிந்து கொண்டு, வாழ்க்கையையும் புரிந்து கொண்டு, கூடவே உண்மையையும் புரிந்து கொள்ள முடியும். ஸ்லோகங்களையும் மந்திரங்களையும் ஜெபித்தோ, அல்லது வேதங்களையோ, பைபிளையோ, குரானையோ, உபநிஷத்துக்களையோ அல்லது அம்மாதிரி புனிதமாகக் கருதப்படும் புத்தகங்களை முழுதுமாக மனனம் செய்தோ, அல்லது மணிக்கணக்காக பூஜைகள்/யாகங்கள் செய்தோ, ஹோமங்கள் வளர்த்தோ, குறிப்பிட்ட நேரத்தில் தியானம் செய்தோ, அல்லது கோவில்களுக்கு சென்றோ, அல்லது ஷேத்திராடனம் செய்தோ, விரதங்களிருந்தோ 'நான்' நினைப்பை அகற்றி விட முடியாது.
எந்த மனம் நம்பிக்கைகளிலும், யாராரோ சொன்ன கருத்துக்களிலும் புதையுண்டு கிடக்கிறதோ, மற்றும் அளவற்ற விஷயஞானத்தால் நிரம்பி வழிகிறதோ, அதனால் வாழ்க்கையையும் மற்றும் உண்மையையும் புரிந்து கொள்ள முடியாது; ஏனென்றால், உண்மை தெளிவானது, எளிமையானது, மௌனமானது, அமைதியானது, ஆர்பாட்டமில்லாதது, கள்ளமில்லா குழந்தைபோன்றது, தெள்ளிய நீரோடை போன்றது; அதனால், அதை உணர, நாமும் அதற்கு இணையாக மௌனமாக, எளிமையாக, கள்ளமில்லா குழந்தையாக, திறந்த புத்தகமாக இருக்க வேண்டும்; நமக்குத் தெரிந்த கருத்துகள், தத்துவங்கள், நம்பிக்கைகள், விஷய ஞானங்கள், முதலியவற்றிலிருந்தெல்லாம் விடுபட்டு, உடல், மனம், புத்தி இவற்றை கடக்க வேண்டும். ஏனென்றால், உண்மை - கடவுள் - நமக்கு தெரிந்ததெற்கெல்லாம் அப்பாற்பட்டது.
எந்த ஒரு முறையான பயிற்சியும், எந்த ஒரு பாடசாலையும், எந்த ஒரு புத்தகமும், எந்த ஒரு குருவும் - எவ்வளவுதான் புனிதமாக அது / அவர் மதிக்கப் படுவதாயிருந்தாலும் சரி, எத்தனை பெரிய கூட்டத்தை அவர் ஈர்ப்பவராயிருந்தாலும் சரி - நமக்கு ஞானத்தை - எப்பொழுதுமே அமைதியுடன் வாழும் ஞானத்தை - புகட்டிவிட முடியாது. மேலும், ஞானமென்பது மெல்ல. மெல்ல, ஏதோ ஒரு கால கட்டத்திற்குப் பின் பெறப்படுவது அல்ல. வாழ்க்கையையும், நம்மையும் நாம் நன்கு புரிந்து கொண்ட கணமே ஞானம் நமக்கு வாய்த்து விடுகிறது; அந்தக் கணமே நாம் உலகத்தையும், சக மனிதர்களையும், மற்றெல்லா ஜீவராசிகளையும் மற்றும் இயற்கையையும் பார்க்கும் பார்வை மாறு படுகிறது. அப்படிப்பட்ட அதிர்ஷ்டமுள்ள நமக்கு இவ்வுலகமும், இதிலுள்ள அனைவரும், அனைத்தும் நமக்குப் பிடித்தாற் போல் மாறுபட்டு தெரிகின்றனர். ஞானமென்பது, முக்காலத்தை உணர்தலோ, பின் நடக்கப் போவதை முன்கூட்டியே சொல்வதோ அல்ல என்பதும் நமக்குத் தெளிவாகி விடுகிறது. பிறப்பு, மறு ஜென்மம், மறு அவதாரம், இறப்புக்குப் பின் வாழ்க்கை, இவற்றைப் பற்றியெல்லாம் தேவையில்லாத சூதாட்ட கணிப்புகளுக்கும், கருத்துகளுக்கும் நம் மனதில் இடம் கொடுத்து நாம் பந்தாடப்படுவதெல்லாம் இனியில்லை.
எதிர்பார்ப்பும், மனக்கலவரமும், மனக்கலக்கமும், இப்படியாக வேண்டும், அப்படியாக வேண்டுமென்ற ஆசையுமில்லாத போது சாந்தி/அமைதி நாம் விரும்பாமலே, அழைக்காமலே நம்மிடம் வந்தமைகிறது. அதன் பிறகு, வாழ்க்கையை நாம் சுமப்பதில்லை; வாழ்க்கைதான் நம்மை சுமக்க ஆரம்பிக்கிறது; ஏனென்றால், நாம் வாழ்க்கையை அதன் போக்கில் விட்டு விடுகிறோம் 'எது நடந்தால் என்ன' என்ற தெளிவில். நாம் சதா சர்வ காலமும் அமைதியாகவே வாழ்கிறோம். சாந்தி அல்லது அமைதிதான் கடவுள்.
கடவுளிடம் நாம் செல்ல முடியாது; ஆனால், கடவுள் - எதனிடமிருந்து அனைத்தும். அனைவரும் ஜனித்தனரோ, முடிவில் எதனிடம், அனைத்தும், அனைவரும் ஒடுங்குவரோ அந்த ஒன்று-எல்லாவற்றிற்கும் ஆதிமூலமானது – எல்லாமாகவுமிருப்பது - அதுவாக நம்மை வந்தடைகிறது, நம் விஷய ஞானங்களையும், மற்றவர் சொன்ன கருத்துக்களையும், நம்மில் திணிக்கப்பட்ட தத்துவங்களையும், தியாகம் செய்துவிட்டு, எளிமையாய், சாதாரணனாய், ஒளிவு-மறைவின்றி, திறந்த புத்தகமாக, எவ்வித எதிர்பார்ப்புகளுமின்றி வாழும் போது. அப்போதுதான் அது நிகழ்கிறது - நம்மின் எந்த ஒரு முயற்சியுமில்லாமல், தன்னால், வெகு சுலபமாய், அது நிகழ்கிறது - நாம் அந்த ஒன்றில் லயமாக, அது நம்மில் லயமாக - நாம் அதுவாகிறோம்.
ஆனால். அச்சமயம் அப்படி நிகழ்ந்துவிடாதிருக்க நம்முள் ஒரு தடுப்பு சுவர் எழும். அது என்னவென்றால், அப்பேராற்றல் எனும் மகாசமுத்திரத்தில் ஒரு துண்டு பெருங்காயமாய் நாம் கரைந்து மறைந்துவிட நம் மனம் (தன்- முனைப்பு – ego) இடம் கொடுக்காது, ‘நம் தனித்தன்மையை இழந்து நாம் விலாசமில்லாதவராய்’ ஆகிவிடுவோமே என்ற ஒரு நியாயமான பயத்தில், ஒரு தேவையில்லாத பத்திர உணர்ச்சியில். அதைத் தாண்டி நாம் நம்மை இழக்கத் தயாராகிவிட்டால் அந்த பேராற்றலுடனான் நமது சங்கமம் – இறப்புக்கு முன்னான இறப்பு – பேரிறப்பு – ஒரு ஆர்பாட்டமுமின்றி, யாருக்கும் தெரியாமல், நம்முள் நடந்து முடிந்து விடும். பிறகு, எப்போதுமே அமைதிதான், சாந்திதான்.
அதனால், இருப்பது போலவே இருப்போம் - சாந்தி! சாந்தி!! சாந்தி!!!
தெ.ரா. முரளி மனோகர்
('அடடே மனோகர்')
199 வெள்ளாளத் தெரு
புரசைவாக்கம்
சென்னை 600 084
(தொலை பேசி: 25325412)
(அலை பேசி: 9840061878)
---*---
புதன், 21 அக்டோபர், 2009
86 இயற்கையே இறைவன்
Posted by அடடே மனோகர் at 3:33 PM
இதற்கு குழுசேர்:
கருத்துரைகளை இடு (Atom)
0 comments:
கருத்துரையிடுக